Fitness Center

 

பேன்ட் சட்டை அணிந்தும்  பனை மரம் ஏறலாம் . நீண்ட நாள் கனவு நிறைவேறப்போகிறது .

பனை மரம் ஏறுபவர்கள் இடுப்பில் இறுக்கமாக வேட்டியை கட்டிக்கொண்டு இடையில் தோல் பெல்ட்டுடன் மார்பில் தோல் கவர் அணிந்து போருக்கு புறப்படுவதுபோல் போவதை பார்த்து இருப்பீர்கள் . இனி அது தேவை இல்லை . பேராசிரியர் ஜெயா  ஜாஸ்மின் பனை பற்றி விளக்கம் தருகிறார். (பனை மரம் ஏறும் கருவி ரூ 3400/- ல்  அரசு மானியத்தில் கிடைக்கும்.படம் மேலே உள்ளது )

காணப்படும் இடங்கள்

இது எவ்விடத்தில் தோன்றியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஆசிய நாடுகளில்தான் பனைகள் அதிகம் காணப்படுகின்றன. தற்காலத்தில் ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, இந்தோனீசியா, மியன்மார், தாய்லாந்து, வியட்நாம், சீனா போன்ற நாடுகளிலும், கொங்கோ போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளிலும் காணப்படுகின்றன.

பனை தமிழ் நாட்டின் மாநில மரமாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமம் (Kadhi and Village Industry Commission) எடுத்த கணக்கெடுக்கின்படி 10.2 கோடி பனை மரங்கள் இந்தியாவில் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளன. இவற்றுள் 50 விழுக்காடு மரங்கள் நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் அடர்ந்துள்ளன. சேலம், சென்னை, செங்கற்பட்டு, சிவகங்கை மாவட்டங்களில் அதிகமான அளவு நிறைந்துள்ளன. பிற மாவட்டங்களில் உள்ள மரங்களின் எண்ணிக்கை 30 லட்சத்திற்கும் குறைவானதே.

பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் வயது மனிதனின் சராசரி வயதிலும் கூடியது என்பது குறிப்பிடக்கூடியது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையா. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 வரையான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும்.

பனையின் பயன்கள்

பனைமரம் உணவு மற்றும் உணவிலிப் பொருள்களை நல்குகிறது. உணவுப் பொருள்களில் பதநீர் முதன்மையானது. இதுவே கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் எனப் பல்வேறு உணவுப் பொருள்களாக வடிவம் பெறுகிறது. பனந்தும்பு, தூரிகைகள், கழிகள், பனையோலைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், மரம், மரப் பொருள்கள் ஆகியன பனையிலிருந்து பெறப்படும் உணவிலிப் பொருள்களாகும். கதர் மற்றும் சிற்றூர்த் தொழில் குழுமக் கணக்கின்படி ஒரு பனை மரமானது ஓராண்டில் 150 லிட்டர் பதநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள் ஆகியவற்றை நல்கும் வளவாய்ப்புடையது. மேலும் ஒரு பனை மரத்திலிருந்து 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றைப் பெறமுடியும் எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், செர்மன், இத்தாலி, பெல்சியம், பிரான்சு, ஆசுதிரேலியா, சப்பான் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருள்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் இந்தியாவிற்கு ஆண்டுதோறும் 200 கோடி ரூபாய்க்கும் மேல் அந்நியச் செலாவணி கிடைக்கிறது. உள் நாட்டிலே உணவிலிப் பனைப் பொருள்கள் பெரிதும் கோவா, கன்னியாகுமரி, பெல்லாரி ஆகிய இடங்களுக்கு விற்பனைக்கென அனுப்பி வைக்கப்படுகின்றன. இவற்றுள் கோவா முன்னணியில் இருக்கிறது.

விவசாயம், கைத்தறிக்கு அடுத்தபடியாக பேரளவு வேலை வாய்ப்பினைக்கொண்டதாக பனைத்தொழில் விளங்குகிறது. 1985 – 86ஆம் ஆண்டில் தேசிய அளவில் 6.94 லட்சம் வேலை வாய்ப்பினையும் தமிழ் நாட்டு அளவில் 5.87 லட்சம் வேலை வாய்ப்பினையும் பனைத் தொழில் வழங்கி இருக்கிறது. இதில் பனைத் தொழிலாளர்கள் வெல்லம் காய்ச்சும் பெண்கள், தும்புக் கைவினைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் அடங்குவர். இளம் மரங்கள் நீங்கலாக பனையேறத் தகுந்த எல்லா மரங்களையும் பயன்படுத்தினால் தமிழகத்தில் மட்டும் மேலும் 10 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பினை இத்தொழில் வழங்கும்.

பனையேற்றம்

பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில். ஏப்ரல் முதல் ஆகசுடு வரை இராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களிலும் ஆகசுடு முதல் மார்ச் வரை கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை சேலம், தருமபுரி மாவட்டங்களிலும் பனையேற்றம் நிகழும். இது ஒரு பருவ காலத் தொழிலாக இருப்பதால் இம்மாவட்டங்களில் வேலை தேடி இடம்பெயருதல் பெருமளவு நிகழ்கிறது.

பனையேற்றம் என்பது மரமேறுதல், பூ பக்குவம் அறிதல், சாறு சேகரித்தல் எனப் பல்வேறு திறன்களை உள்ளடக்கிய தொழில் ஆகும். மரமேற நெஞ்சப் பட்டை, இடை வார், தளை ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. இத்தொழில் புரியும்போது மரத்தின் சொரசொரப்பான பகுதியில் உடல் உராயும்பொழுது சிராய்ப்பு ஏற்பட்டு உடல் பொலிவிழக்கிறது. மரம் ஏறுதலின் இடரையும் துன்பத்தையும் களைய இயந்திரச் சாதனங்கள் எதுவுமில்லை. ஒரு மரம் சராசரி 36 முதல் 42 மீட்டர் வரை உயரமுடையது. எனவே ஒரு நாளைக்கு இரு முறை 30 முதல் 40 மரங்கள் ஏறுதல் என்பது பெரும் இடர் மிகுந்தது ஆகும். எனவே மிகுந்த அனுபவசாலிகளே பனைமரமேறுவர். தளைநாரைக் காலில் கட்டி பனைமரம் ஏறுவர்.

பனைத்தொழிலாளர் நிலை

80 விழுக்காட்டிற்கும் அதிகமான பனைத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்கிறார்கள். ஒரு பனைத் தொழிலாளர் நாள்தோறும் 10 முதல் 15 மணி நேரம் வரை மேற்கொள்ளும் வேலைக்கு 15 ரூபாய்கள் வரை சம்பாதிக்கிறார். எனவே ஒரு பனைத் தொழிலாளரின் குடும்ப வருமானமானது அவர் எத்தனை பனை மரங்கள் ஏறுகிறார் என்பதனையும் அவர் குடும்பத்தில் எத்தனை உழைப்பாளர்கள் இருக்கிறார்கள் என்பதனையும் பொருத்தே அமைகிறது. பெரும்பான்மையான பனைத் தொழிலாளர்களுக்கு சொந்த மரங்களில்லை. தமிழகத்தில் உள்ள பனையேறும் குடும்பங்களில் 67.85% குடும்பங்களுக்கு சொந்த மரங்கள் கிடையாது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் நிலக்கிழார்கள் பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பதநீர் இறக்கக் குறைந்த கூலிக்கு ஆள்களை நியமித்துக்கொள்கிறார்கள்.

பனஞ்சாறு உடலுக்கு நலம் தரும் நீரகம். இதில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்சத்துகள், இரும்பு, எரியம், சுண்ணாம்பு, கரிநீரகி ஆகியன உள்ளன. இது சத்துள்ளது. எளிதில் செரிக்கக் கூடியது. இது எலும்புருக்கி நோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது என்றும் ஈரல் நோய்க்கு ஏற்ற மருந்தென்றும் கருதப்படுகிறது. 25% குறையாத பதனீர் நேரடியாகவே நுகரப்படுகிறது. மீதம் உள்ளவை வெல்லம் தயாரிக்கப் பயன்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்தின் பெரும்பகுதி உள்ளூரிலேயே விற்கப்படுகிறது. அவசரப் பணத்தேவை, சந்தைவிலையை அறியாமை, சந்தைக்குக் கொண்டு செல்ல நேரமின்மை ஆகியவற்றின் காரணமாக இடைத்தரகர்களின் சுரண்டலுக்கு ஆளாகின்றனர்.

உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்தல், சந்தையிடல் ஆகியவற்றிலும் கூடச் சிக்கல்கள் உள்ளன. போதிய முதலீடின்மை, தொழிலாளர் எண்ணிக்கைக் குறைவு ஆகியன பெரும் சிக்கல்கள் எனக் கூறப்படுகின்றன. மிகக் குறைந்த வருமானத்தையே நல்கும்நிலையில் பனைத்தொழில் இருப்பதால் தொழிலாளர்களை பெருமளவில் ஈர்க்க முடியாமல் இத்தொழில் மெல்ல மெல்ல நலிந்து கொண்டிருக்கிறது.

எவ்வாறாயினும் பனைத்தொழில் பெருமளவு வேலைவாய்ப்பும்; உணவு மற்றும் உணவிலிப் பனைப் பொருள்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேவை இருத்தல் வெள்ளிடை மலை. பனங்கற்கண்டு போன்ற மதிப்புடை உணவுப் பொருள்களை உற்பத்தி செய்தல் மூலம் முன்னைய சிக்கல்களை வினைவலிமையோடு எதிர்கொள்ள முடியும் என்பதை மார்த்தாண்டத்திலுள்ள பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் கண்டது. பதநீரைக் கொண்டு வெல்லம் காய்ச்சுவதைக் காட்டிலும் பனங்கற்கண்டு தயாரித்தல் இலாபமுடையது என்று கண்டறியப்பட்டது. இவ்வுற்பத்தியால் பனைத்தொழிலாளர் வாழ்வும் தொழிற்றுறையின் வளர்ச்சியும் மேம்படுவது ஐயத்திற்கு இடமின்றி நிரூபனமானது. உணவிலிப் பனைப்பொருள்களை உற்பத்தி செய்யும் அலகுகளை தோற்றுவிக்கும் பணியில் கூட்டுறவுத்துறையும் தன்னார்வத் தொண்டகங்களும் தனியார்களும் ஈடுபட்டுள்ளனர். வடிவமைத்தல் பயிற்சி, உற்பத்திப் பொருள்களை பரவலாக்கல், சரியான முதலீடு, சந்தையிடல் வசதிகள் ஆகியன உணவிலிப் பொருள்களின் உற்பத்தியையும் சந்தையிடலையும் அதிகப்படுத்தியுள்ளன.

தமிழகம் முழுவதும் உள்ள பனைத் தொழிலாளர்களுக்கு பனைத் தொழில் கொண்டுள்ள வளவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு தந்து அவர்கள் வாழ்க்கையை சீர்படுத்துவதில் பனைத் தொழிலாளர் மேம்பாட்டுச் சங்கம் முன்னோடியாகத் திகழ்கிறது.

பனை மரம்

பனை மரம் உள்ள 108 நாடுகளில் கள் தடை செய்யப்பட்ட ஒரே மாநிலம் தமிழகம் தான் ..! அழிவின் விழும்பில் பனை மரங்கள்.!
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்த வரை, அதனால் வருமானம் கிடைத்தவரை பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. அதன்பிறகு, பனை மரங்களை கைவிட்டு விட்டனர் விவசாயிகள். வறட்சி காரணமாக பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடிதான் உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன
பனையில் ஆண், பெண் என 2 வகை உள்ளன. பெண் பனையை பருவப் பனை என்றும், ஆண் பனையை அழகுப் பனை எனக் குறிப்பிடுவது வழக்கம். பனை 10 ஆண்டுகளுக்குப் பின்னர் 15 அடி உயரம் வரை வளர்க்கிறது. இந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் பூ பூக்கும். அப்போது தான் ஆண் பனை, பெண் பனை எது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
கார்த்திகைத் திருநாளில் ஆண் பனையிலிருந்து பாலைகளை வெட்டி குழி தோண்டி தீ வைத்து மூட்டம் போட்டு கரியாக எடுத்து உரலில் இடித்து துணிப்பையில் வைத்து மாவலி சுற்றுவது இளைஞர்களின் வழக்கமாகும். பனை ஓலை குருத்துகளைப் பிரித்தெடுத்து, பகலில் வெயிலிலும், இரவில் பனியிலும் பதப்படுத்தும் முன்பாக ஓலையின் நடுப்பகுதியில் உள்ள ஈக்கியுடன் ஓலையைப் பிரித்தெடுத்தும் ஈக்கியில்லாத ஓலையைத் தனியாக பிரித்து எடுத்து நுட்பமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
அரைப்படி முதல் 5 படி வரை கொள்ளவு கொண்டவை கொட்டான்கள் எனவும், 7 படியிலிருந்து 11 படி வரை கொள்ளளவு உள்ள பெட்டி வகைகள் சீர்வரிசைப் பெட்டிகள் எனவும், 20 படியிலிருந்து 30 படிகள் வரை கொள்ளளவு கொண்ட நார்பெட்டிகள் அரைப்பெட்டிகள் என்றும், 5 மரக்கால் அளவுள்ள பெரிய நேர்த்தியான நார்பெட்டிகள் கடகம் என்றும், நெல் இதர தானியங்களை காற்றில் தூற்றி தரம் பிரிக்கப் பயன்படுத்துபவை தூற்றுப் பெட்டிகள் என்றும், தானியங்களை புடைத்து எடுக்க சொழகு அல்லது முறம் என்றும் சரக்குகளை கட்டி அனுப்ப பனைப் பாய்கள் என அழைத்து அதனைப் பயன்படுத்தி வந்தனர்.
இதைத் தவிர, மட்டையிலிருந்து நார் எடுத்து மெத்தைகள், பிரஷ்கள், ஆடைகள், கால்மிதிகள், வீட்டு அழகு சாதனப் பொருள்களும் பனையிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. பதனீர் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் விருத்தியாகும், நோய் உண்டாக்கும் கிருமி தொற்றுகளைத் தடுக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளன.
பனை விவசாய அழிவுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சொந்த மரமில்லாததால் பனைமரம் ஏறியவர்கள் வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர். சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பூமியின் வறட்சி காரணமாகவும், சீமைக் கருவேல் மரங்களின் எல்லையில்லா வளர்ச்சி காரணமாக பனை மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்த நிலையில், எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி பனைமரங்கள் வெட்டப்பட்டு, செங்கல் சூளைக்கு எரிபொருளாக லாரிகளில் அனுப்பப்பட்டு வருகின்றன என்றார்.
திணைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாகக் கொள்வர் பயன் தெரிவார் -என்ற குறளின்படி எந்தவித செலவுமின்றி வளர்ந்து நிற்கும் சில கோடி மனை மரங்களையாவது பாதுகாக்க வேண்டும். பனையின் பயனைப் பெற புதிய வழிகளை உருவாக்க வேண்டும். புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தமிழர்களின் அடையாளமாக உள்ள பனை மரத்தை அழிவின் விளிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமாகும்.

Hindi Coaching